பாகிஸ்தான் வீரர்களை "ஏமாற்றுக்காரர்கள்" என்று தென் ஆப்பிரிக்க நடுவர் ரூடி குயெர்ட்சன் தன்னிடம் கூறியதாக பதவியிறக்கம் செய்யப்பட்ட ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர் கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரூடி குயெர்ட்சன் அவ்வாறு கூறியது உண்மையென்றால் அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தை விதிகளை மீறியவர் ஆவாரா என்ற ரீதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அவர் மீது நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவங்களால் நடுவர் டேரல் ஹேர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்து அவரை உயர்மட்ட நடுவர் குழுவிலிருந்து நீக்கியது.
இதற்கு பதில் நடவடிக்கையாக அவர் தனக்கு ஐசிசி இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். அப்போது துவங்கிய சர்ச்சை அதன் பிறகு விசாரணைக்கு வந்தது. லண்டனில் உள்ள மத்திய வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் டேரல் ஹேர் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் போது நடுவர் ஹேர் தன்னிடம் ரூடி குயெர்ட்சன் பாகிஸ்தான் வீரர்கள் "ஏமாற்றுகாரர்கள்" என்று தொலைபேசியில் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது குறித்து, ரூடி குயெர்ட்சன் தொலைபேசியில் தனது மகிழ்ச்சியை தன்னிடம் பகிர்ந்து கொன்டதாகவும் டேரல் ஹேர் தெரிவித்துள்ளார்.
அதாவது "ஆஹா அருமையான விஷயம், அந்த ஏமாற்றுக்காரர்கள் இப்போது வீட்டுக்கு போக வேண்டியதுதான்" என்று ரூடி குயெர்ட்சன் தெரிவித்தார் என்று ஹேர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பு ஐசிசி நடுவர்கள் மேலாளரான டக் கவ்வி தொலைபேசியிலிருந்து செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது டேரல் ஹேர் கூறியது உண்மையா, அவ்வாறு கூறியிருந்தால் ருடி குயெர்ட்சன் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை விவாதிக்க லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நதீம் அஷ்ரஃப்.