வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சிறந்த வீராங்கனை : ஐசிசி விருது!

Webdunia

செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (15:31 IST)
webdunia photoFILE
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியை 2006 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தேர்வு செய்துள்ளது!

2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தென் ஆப்ரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்கில் இன்று வெளியிட்டது.

ஆஸ்ட்ரேலிய அணியின் தலைவர் ரிக்கி பாண்ட்டிங் 2வது முறையாக சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பெற்றுள்ளார்.

கிரிக்கெட் வீராங்கனைகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், பன்முக திறன் கொண்ட ஆட்டக்காரருமான ஜூலன் கோஸ்வாமி சிறந்த வீராங்கனை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த 23 வயதான ஜூலன் கோஸ்வாமி, ஆஸ்ட்ரேலியாவின் லிசா ஸ்தாலேக்கர், இங்கிலாந்தின் கிளையட் டெய்லர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு சிறந்த வீராங்கனையாக தேர்வாகியுள்ளார்.

எனது வாழ்க்கை கனவு நனவாகியுள்ளது. ஐ.சி.சி. விருதால் மகிழ்ச்சியில் உள்ளேன். இவ்விருதிற்கான போட்டியில் இருந்த மற்ற வீராங்கனைகளும் தலைசிறந்த ஆட்டக்காரர்களே. எனவே இந்த விருது மிகுந்த சிறப்பிற்குரியது என்று ஜூலன் கோஸ்வாமி கூறியுள்ளார்.

ஐ.சி.சி. அறிவித்த விருது பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்