கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவே பாடுபடுகிறேன் : கபில்!

Webdunia

வியாழன், 12 ஜூலை 2007 (14:25 IST)
இந்தியன் கிரிக்கெட் லீக் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காகத்தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் கூறியுள்ளார்!

சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் தேவ், ஐ.சி.எல்.லிற்காக பணியாற்றுவது எந்தவிதத்திலும் கிரிக்கெட்டிற்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேச கிரிக்கெட் பயிற்சிக் கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்க திட்டமிட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவர்கள் எதைச் செய்ய நினைக்கிறார்களோ அதைச் செய்யட்டும். என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றுவேன். எங்கிருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒன்றேதான்" என்று கூறியுள்ளார்.

ஐ.சி.எல். உடன் இணைந்து பணியாற்றுவது ஒழுங்கீனமாகாது என்று கூறிய கபில் தேவ், அதற்காக என்னை நீக்கினால் அது கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கீனமான நடவடிக்கையாக இருக்கும் என்று சாடியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்