இங்கிலாந்து ஒரு நாள் அணியின் தலைவராக திறமை மிக்க பன்முக ஆட்டக்காரரான பால் காலிங்வுட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!
ஒரு நாள் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து மைக்கேல் வான் விலகிக் கொண்டதையடுத்து, அப்பொறுப்பிற்கு 121 போட்டிகளில் விளையாடியுள்ள பால் காலிங்வுட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற சி.பி தொடரில் நடந்த முக்கிய போட்டி ஒன்றில் சதமடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தது மட்டுமின்றி, அத்தொடரிலும், அதன் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் காலிங்வுட் மிகச் சிறப்பாக ஆடினார்.
காலிங்வுட்டின் அனுபவமும், ஒரு நாள் போட்டிகளில் அவர் சாதித்ததும் அணித் தலைவராக அவரைத் தேர்வு செய்வதற்கு காரணமாயின என்று கூறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவர் டேவிட் கிராவனி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடி வரும் பால் காலிங்வுட், அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். இங்கிலாந்திற்குச் செல்லும் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் காலிங்வுட்டின் தலைமைத் திறன் நிச்சயம் அந்த அணிக்கு பலமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.