அயர்லாந்து, இங்கிலாந்து பயணங்களுக்கு இந்திய அணியின் மேலாளராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரரும், மிகுந்த அனுபவம் மிக்கவருமான 72 வயது சந்து போர்டே நியமிக்கப்பட்டுள்ளார்!
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அயர்லாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டிகளிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெறும் டெஸ்ட், ஒரு நாள் போட்களில் விளையாடச் செல்லும் இந்திய அணிக்கு சந்து போர்டே மேலாளராக நியமிப்பது என்று தலைநகர் டெல்லியில் இன்று கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது,
இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட கிரஹாம் ஃபோர்ட், அப்பொறுப்பை நிராகரித்ததையடுத்து இம்முடிவை கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.
இந்திய அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,061 ரன்கள் எடுத்த சந்து போர்டே அருமையான லெக் ஸ்பின்னரும் ஆவார். டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பன்முக ஆட்டக்காரர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக 1982 முதல் 1984 வரை இருந்தவர். 1988-89 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் சென்ற இந்திய அணிக்கு மேலாளராக இருந்தவர் சந்து போர்டே.
அயர்லாந்தில் ஜூன் 26 முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அதன்பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஸ்காட்லாந்தில் ஜூலை 3 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி, பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. (பி.டி.ஐ.)