இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர் கானிற்கு காயம் ஏற்பட்டிருப்பினும் அயர்லாந்து, இங்கிலாந்து பயணத்திற்கான அணித் தேர்வில் அவருடைய பெயரும் பரிசீலிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியச் செயலர் நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்!
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிரஞ்சன் ஷா, ஜாஹீர் கானிற்கு இடுப்பில் ஏற்பட்ட காயத்திற்காக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது என்றும், அதில் காயம் சாதாரணமானது என்றும் தெரியவந்துள்ளதாகவும், ஆயினும் அணியின் உடல்நலக் காப்பாளர் ஜான் குளோஸ்டரின் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக ஷா கூறினார்.
அயர்லாந்து, இங்கிலாந்து பயணத்திற்கான அணித் தேர்வு நாளை டெல்லியில் நடைபெறும் என்று கூறிய நிரஞ்சன் ஷா, காயமுற்றிருந்த இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் பட்டேல் முழு உடல் தகுதி பெற்றுவிட்டதாக குளோஸ்டர் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார். (பி.டி.ஐ.)