அம்பேத்கர் கேலிச்சித்திரம் மாற்றப்படும்-கபில் சிபல்

வெள்ளி, 11 மே 2012 (18:25 IST)
கபில் சிபல் மன்னிப்பு!
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில் அம்பேத்காரின் கேலிச்சித்திரம் இடம்பெற்றதற்காக வருந்துகிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்திலிருந்து அம்பேத்கர் கேலிச்சித்திரத்தை மாற்ற என்.சி.இ.ஆர்.டி.யிற்கு உத்தரவிட்டுள்ளதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் 11-ம் வகுப்புக்கான பொலிட்டிக்கல் சைன்ஸ் பாடப்பிரிவில் அம்பேத்கர் பற்றிய கேலிச்சித்திரம் இடம் பெற்றுள்ளது. இது பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அமளி ஏற்பட்டது. இந்த சித்திரத்தை வரைந்தவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் பதிலளித்ததாவது:

சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில் அம்பேத்காரின் கேலிச்சித்திரம் இடம்பெற்றதற்காக வருந்துகிறேன். இந்த பாடப்புத்தகங்கள் 2006-ம் ஆண்டே தயாரித்து பதிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது நான் அமைச்சர் பதவியில் இல்லை. எனினும் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விவகாரம் குறித்து ஏப்ரல் மாதமே எனது கவனத்துக்கு வந்தது. இதுகுறித்து என்.சி.இ.ஆர்.டி. அமைப்பிடம் பதிலளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

மனிதவளத்துறையினால் அமைக்கப்பட்ட கமிட்டியால் பாடப்புத்தகங்களில் வரும் ஆட்சேபத்திற்குரிய விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற விஷயங்கள் பாடப்புத்தகங்களில் இருந்து அடுத்த வருடம் நீக்கப்படும்.

வரும் கல்வி ஆண்டு முதல் இத்தகைய ஆட்சேபத்துக்குரிய விவகாரங்கள் வராமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்