ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ரஷ்டி கலந்துகொள்ள முடியாமல் போனதுபோன்றே, கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
" தி சாட்டானிக் வெர்சஸ்" (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகத்தை எழுதி ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும், அதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக கூறி, எழுத்தாளர் சல்மான் ரஷ்டியை இன்னமும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர்.
அவர்களது எதிர்ப்பு காரணமாக அண்மையில் ஜெப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொள்ள முடியாமல் தனது நிகழ்ச்சியையே ரத்து செய்தார் சல்மான்.
இந்நிலையில், அவரைப்போன்றே இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானவர் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
வங்கதேசத்திலிருந்து தப்பிவந்து இந்தியாவில் அடைக்கலமான தஸ்லிமா, இன்னமும் பகிரங்கமாக நடமாட முடியாமல் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் எழுதிய "நிர்பஸான்" என்ற அவரது 7 ஆவது அத்தியாய சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா,கொல்கத்தாவில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து வந்த மிரட்டல்கள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
இத்தகவலை தஸ்லிமா, தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.