இடைத்தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வெற்றி: கருத்து கணிப்பு
திங்கள், 9 மே 2011 (18:20 IST)
ஆந்திர மாநிலம் கடப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அபார வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் கடப்பா நாடாளுமன்ற தொகுதி மற்றும் புலிவெந்துலா சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.
கடப்பாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்துலாவில் அவரது தாயார் விஜயலஷ்மியும் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அம்மாநில அமைச்சர் ரவீந்திரா ரெட்டியும், விஜயலஷ்மியை எதிர்த்து ராஜசேகரரெட்டி சகோதரர் விவேகானந்தா ரெட்டியும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் கடப்பா மற்றும் புலிவெந்துலா ஆகிய தொகுதிகளில் ஓட்டுப் பதிவுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் விஜயலஷ்மி இருவரும் அபார வெற்றி பெறுவார்கள் என தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஜெகன்மோகன் ரெட்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.