பி.ஜே.தாமஸ் நியமனம்: உச்ச நீதிமன்றம் கேள்வி

செவ்வாய், 30 நவம்பர் 2010 (16:47 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு சர்ச்சை நிலவியபோது தொலைத் தொடர்பு செயலராக இருந்த பி.ஜே.தாமஸ், அது குறித்து விசாரணை செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழக்கத்தின் கண்காணிப்பாளராக எவ்வாறு இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2003ஆம் ஆண்டு கேரள அரசின் உணவுத் துறை செயலராக பி.ஜே.தாமஸ் பணியாற்றியபோது, அயல் நாட்டிலிருந்து பனை எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதில் நடந்த ரூ.இரண்டரை கோடி ஊழலில் தொடர்புடையவர் என்று அது தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.

அவ்வழக்கில் பிணையில் விடுதலைப் பெற்று தனது அரசுப் பணியைத் தொடர்ந்த பி.ஜெ.தாமஸ், பின்னாளில் மத்திய அரசுப் பணிக்கு வந்தார். 2009ஆம் ஆண்டில் தொலைத் தொடர்புத் துறையின் செயலராக, ஆ.இராசாவின் அமைச்சரவைச் செயலராக இருந்தார். இப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சர்ச்சை இருந்தது.

இந்த நிலையில் தற்போது ஊழல் தடுப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஒருவர் எவ்வாறு ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நேர்மையாக செயல்பட முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில், 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக வழக்கில் இன்று நடந்த விசாரணையில், அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு சர்ச்சை நிலவியபோது தொலைத்தொடர்பு செயலராக இருந்த ஒருவர், அது தொடர்பான விசாரணை செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகத்தின் கண்காணிப்பாளராக எப்படி பணியாற்றி முடியும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்