2ஜி ஊழல் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிப்பிற்கு ஆட்சேபனை இல்லை: மத்திய அரசு

செவ்வாய், 30 நவம்பர் 2010 (14:40 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) நடத்திவரும் விசாரணையை நீதிமன்றம் கண்காணிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய பொது நல வழக்கு மையம் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன் ம.பு.க. சார்பாக நேர் நின்ற மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் இதனைத் தெரிவித்துள்ளார்.

“விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய நீதிமன்றம் கண்காணிப்பு செய்வதில் அரசிற்கு எந்த ஆட்சேபனையும் இல்ல” என்று கோபால் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

பொது நல வழக்கு மையம் தொடர்ந்த வழக்கின் மைய கோரிக்கையே, இந்தியாவின் வரலாறு காணாத இந்த மாபெரும் ஊழல் தொடர்பாக ம.பு.க. நடத்திவரும் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்பதே என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்