'பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பிலும் மதானிக்கு தொடர்பு'
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2010 (15:27 IST)
பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானிக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, கடுமையான முயற்சிக்குப் பின்னர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மதானி, கர்நாடக காவல்துறையினரின் விசாரணைக் காவலில் இருந்து வருகிறார்.
அவரிடம் கர்நாடக காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் மதானிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா இன்று தெரிவித்தார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தமக்கு உள்ள தொடர்பை மதானி வெளியிட்டிருப்பதாக கூறினார்.
கடந்த ஏப்ரல் 17 ம் தேதி, ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு உள்பகுதியிலும், சுற்றுச்சுவரிலும் இரண்டு குண்டுகள் வெடித்தன இந்த குண்டுவெடிப்பில் சிலர் காயமடைந்தபோதிலும்,யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.