ஹைதராபாத் தலைநகர் குறித்து ஒருமித்த கருத்து - ஜி.கே. பிள்ளை

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (19:15 IST)
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிதாக உருவாக்கப்படும தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்று உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறியிருக்கிறார்.

ஆனால், இந்த கருத்தைக் கூறிய சிறிது நேரத்திற்குள்ளாகவே ஹைதராபாத்தை தெலுங்கானா தலைநகராக்குவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று அவர் கூறினார்.

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா குறித்த விஷயத்தில் பல்வேறு கருத்துமோதல்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று கூறினார்.

ஒவ்வொருவரின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும், தொடர்ந்து அதுபற்றி பேச்சு நடத்தப்படும் என்று கூறினார்.

புதிய மாநிலம் அமைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும்பட்சத்தில் ஆந்திராவில் தொடர்ந்து வரும் போராட்டம் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார்.

உள்துறை செயலாளரின் ஹைதராபாத் குறித்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், ஹைதராபாத்தை தலைநகராக்குவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையே ஹைதராபாத் தெலுங்கானா பகுதியில் இடம்பெற்றுள்ள போதிலும், அதன் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று ஆந்திராவைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்