கடல் பாலத்திற்கு ராஜிவ்காந்தி பெயர்: சரத் பவாருக்கு பால் தாக்கரே கண்டனம்

வியாழன், 2 ஜூலை 2009 (13:19 IST)
மும்பையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பந்த்ரா-வோர்லி கடல் பாலத்திற்கு ராஜிவ்காந்தி பெயரைச் சூட்ட வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் காங்கிரஸ் தலைமையிடம் ஆதாயம் தேட சரத்பவார் முயற்சிப்பதாக சிவசேனா தலைவர் பால் தாக்கரே குற்றம்சாற்றி உள்ளார்.

இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், புதிதாக திறக்கப்பட்டுள்ள கடல் பாலத்திற்கு ராஜிவ் காந்தி பெயரை வைக்க வேண்டும் என சோனியாவிடம் வலியுறுத்தியதன் மூலம், தனது கட்சியை மீண்டும் காங்கிரஸில் இணைக்கும் நடவடிக்கைக்கு சரத் பவார் வித்திட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி பெரும் சரிவைச் சந்தித்திருந்தாலும், சரத் பவாரும், அவரது ஆதரவாளர் பிரபுல் படேலும் தங்களின் அமைச்சர் பதவிகளை தக்க வைத்துக் கொண்டனர். அதற்கு பிரதி உபகாரமாக தற்போது ராஜிவ் பெயரை கடல் பாலத்திற்கு வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

சரத்பவாரின் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்ததன் மூலம் முதல்வர் அசோக் சவான் மற்றும் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் மராட்டியத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்றும் பால் தாக்கரே தனது தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்