போர்க் கப்பல்கள் கட்டும் திறனுடைய நாடுகள் வரிசையில் இந்தியா
சனி, 28 பிப்ரவரி 2009 (13:56 IST)
முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ள விமானம் தாங்கிப் போர்க் கப்பல் தயாரிக்கும் பணிக்கு கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்மூலம் மிகப்பெரிய போர்க் கப்பல்கள் கட்டும் திறனுடைய நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
கொச்சியில் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், விமானம் தாங்கிப் போர்க் கப்பல் கட்டுமானப் பணிக்கு ரிமோட் மூலம் அடிக்கல் நாட்டிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, "முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்தப் போர்க் கப்பல் மூலம், நமது போர்க் கப்பல் கட்டுமானத் திறனும், தொழில்நுட்பத் திறனும் உலகிற்கு உணர்த்தப்படும்" என்றார். இந்தியாவில் கட்டப்பட்டுள்ள போர்க் கப்பல்களிலேயே மிகப்பெரிய கப்பலாக இந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஃபிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 40,000 டன்கள் கொள்ளளவு உடைய போர்க் கப்பல்களைத் தயாரிக்கும் திறன் இந்தியாவிடம்தான் உள்ளது என்பத குறிப்பிடத்தக்கது.