அணு மின் சக்தி தொழில்நுட்பத்தில், அதி நவீனமானது என்று கருதப்படும் 1,650 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐரோப்பிய அணு மின் உலைகள் இரண்டை இந்தியாவில் அமைக்க, பிரான்ஸ் நாட்டின் ஆரீவா நிறுவனத்துடன் இந்திய அணு சக்திக் கழகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் நிறுவப்படவுள்ள இந்த இரண்டு மின் உலைகளுக்கான ஒப்பந்தத்தில் இந்திய அணு சக்தி கழகத்தின் (Nuclear Power Corporation of India - NPCL) தலைவர் எஸ்.கே. ஜெயின், ஆரீவா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி ஆன்னி லூவர்ஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் பிரிதிவிராஜ் சவான், எரிசக்தித் துறை துணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியாவின் மின் தேவையைக் கருதி செய்யப்பட்டுள்ள முதல் வணிக ரீதியான அணு மின் சக்தி ஒப்பந்தம் இது என்று கூறிய எஸ்.கே. ஜெயின், இந்த அதி நவீன அணு மின் உலைகள் நிறுவப்படவுள்ள மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பது குறித்து பிறகு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என்று கூறினார்.
1973ஆம் ஆண்டு இந்தியா முதன் முதலில் அணு ஆயுத சோதனை நடத்தியதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் விதிக்கப்பட்ட அணு தொழில் நுட்பத் தடை, இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் நீக்கப்பட்டதையடுத்து செய்யப்பட்டுள்ள முதல் தொழில்நுட்ப-வணிக ஒப்பந்தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஆரீவா அணு சக்தி உலைகள் ஒவ்வொன்றும் 5.2 பில்லியனில் இருந்து 7.8 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர்கள் விலை கொண்டவை. இறுதி விலை குறித்து இரு தரப்பும் பேசி முடிவு செய்யும்.
இந்தியாவின் அணு சக்தித் தேவையை நிவர்த்தி செய்ய அமெரிக்காவிடமிருந்தும் பல அணு மின் சக்தி உலைகளை வாங்கி நிறுவப்படும் என்று ஜெயின் தெரிவித்தார். ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட அணு மின் உலைகள் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தத்தின்படி, நமது நாட்டின் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் 300 டன்கள் அளவிற்கு விற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்பொழுது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த அதி நவீன அணு உலைகள் 60 ஆண்டுக்கால் ஆயுள் கொண்டவை. அதுவரை அவைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை வழங்க ஆரீவா இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவின் மின் சக்தி உற்பத்தி தற்பொழுது 1,47,000 மெகா வாட்டாக உள்ளது. இதில் அணு மின் நிலையங்கள் மூலம் கிடைப்பது 4,150 மெகா வாட் மட்டுமே. இதனை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 30,000 மெகா வாட்டாக உயர்த்த அணு சக்தி ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.