இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை: அத்வானி கவலை
இலங்கையில் சிறிலங்க படையினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்பாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி கவலை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையை, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணர்வுபூர்வமாக கையாளவில்லை என்றும் அவர் குற்றம் சாற்றினார்.
தமிழக பா.ஜனதா தலைவர் இல.கணேசன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர்களுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.
போர்முனையில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்ற, அமைப்பு ரீதியான ஆக்கபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.
இந்த பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை, நிலைமையை மேலும் சீர்குலைக்கவும், இலங்கையில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.