இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது மக்களின் உரிமை : உச்ச நீதிமன்றம்
வியாழன், 22 ஜனவரி 2009 (20:47 IST)
கடற்கரைகள், வனங்கள், ஆறுகள் மற்றும் இதர நீராதாரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மக்கள் தடையின்றியும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்துவதற்கானவை என்றும், மக்களின் இயற்கையான உரிமைகளை அரசால் கூடப் பறிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கோவாவில் கடற்கரைக்குச் செல்ல பொது மக்கள் பயன்படுத்தும் சாலை, வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆக்கிரமித்து, ஃபொமென்டோ ரிசார்ட் மற்றும் ஹோட்டல் என்ற நிறுவனம் தனது கட்டடங்களை விரிவுபடுத்தியது தொடர்பான விரைவு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோர் கொண்ட அமர்வு, அரசை ஏமாற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள உணவு விடுதியின் கட்டடங்களை இடிக்கும்படி உத்தரவிட்டதுடன்,"இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்து நீதிமன்றங்களை மக்கள் அணுக முடியும்" என்று கூறியுள்ளது.
"நீராதாரங்கள், வனங்கள், ஆறுகள், கடற்கரைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை மக்களின் சார்பில் அரசுதான் அறக்கட்டளைதாரராக நின்று பாதுகாக்க வேண்டும். குறிப்பாக எதிர்காலச் சந்ததியினருக்காக இதைச் செய்ய வேண்டும். பொதுச் சொத்துக்களை உருவாக்கி அவற்றை மக்கள் தடையின்றிப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
பொது மக்களின் நம்பிக்கைக்குரிய சொத்துக்களை தனியார் சொத்துக்களாக அரசால்கூட மாற்ற முடியாது. அப்படி மக்களின் உரிமைகளில் தலையீடுகள் இருப்பதாகத் தெரிந்தால், காற்று, ஒளி, நீர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் நீதிமன்றம் நேரடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்" என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.