சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
சபரிமலையில் இன்று மாலையில் மகரஜோதி நடைபெறுவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் இவ்வருட மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் பக்தர்கள் கூட்டம் ஆரம்பம் முதலே அதிக அளவு காணப்பட்டது.
சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகரஜோதி பூஜை இன்று மாலை நடைபெறுகிறது. இதையட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெறும் நெய் அபிஷேகம் காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் 6.28 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சங்கிரமாபிஷேகம், உஷ பூஜை நடைபெற்றது.
பின்னர் காலை 8 மணிக்கு மீண்டும் நெய் அபிஷேகம் தொடங்கியது. உச்சிகால பூஜைக்கு பின்னர் பிற்பகல் 2 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர் 18ஆம் படி ஏற பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாலை 6.30 மணி அளவில் ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படுகிறது. பின்னர் மகரஜோதி தெரிந்த பிறகே பக்தர்கள் 18ஆம் படி ஏற அனுமதிக்கப்படுவர்.
வரும் 20ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஆனால், 19ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 18ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.
மகரஜோதியை பார்வையிடுவதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
மகரஜோதியை பக்தர்கள் எளிதில் தரிசிப்பதற்காக புல்மேடு, உப்புபாறை, பாண்டித்தாவளம், சரங்குத்தி, அப்பாச்சிமேடு, நீலிமலை, பம்பை ல்டாப், சாலக்கயம், அட்டத்தோடு, பிலாப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தரிசனம் முடித்த பக்தர்கள் இப்பகுதிகளுக்கு செல்லுமாறு தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. தரிசனம் முடித்த பக்தர்கள் சன்னிதானத்தில் இருந்து உடனடியாக திரும்புமாறு காவல்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.