பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம்

வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:08 IST)
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் 5ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 90 சதவீத பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெட்ரோல், டீசல் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

சென்னை, கொல்கட்டா, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாகனப் போக்குவரத்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடிக்குமானால், இருசக்கர வாகன ஓட்டிகள் பேருந்திலோ, ரயில்களிலோ பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விடும்.

சென்னையில் நேற்று விற்பனை நடைபெறும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் சென்றதைப் பார்க்க முடிந்தது.


பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விநியோகம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜய் பன்சால் கூறுகையில், ஹெச்பிசிஎல் பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே இயங்கி வருவதாகவும், அநேகமாக இன்றைக்குள் அவற்றிலும் பெட்ரோல், டீசல் தீர்ந்து விடும் என்றும் கூறினார்.

இதற்கிடையே எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் பிரதிநிதிகள், இன்று பிரதமர் மன்மோகன் சிங், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கி 3 நாட்கள் ஆகும் நிலையில், அநேகமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் அரசுக்குச் சொந்தமான மின்சார தயாரிப்பு நிறுவனங்களில் மின் உற்பத்தியும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தலைநகர் டெல்லி, தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலைமை அடுத்த ஓரிரு தினங்களில் சீரானால் மட்டுமே, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்