காஷ்மீர்: காங். - தேசிய மாநாடு கூட்டணி ஆட்சி?

ஞாயிறு, 28 டிசம்பர் 2008 (16:55 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.

மொத்தம் 87 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

மாலை 3 மணிவரை பிடிபி (மக்கள் ஜனநாயகக் கட்சி) 9 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. பிடிபி 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

தேசிய மாநாட்டுக் கட்சி அதிகபட்சமாக 11 இடங்களில் வெற்றி பெற்று 16 இடங்களில் முன்னணியில் இருந்து வருகிறது.

பாஜக 5 இடங்களில் வெற்றியுடன் 7 இடங்களில் முன்னணி வகிக்கிறது. சுயேச்சைகள் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளன. 7 தொகுதிகளில் இதர கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

எனவே அனைத்து தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டாலும் ஆட்சியமைக்கத் தேவையான 44 தொகுதிகளை எந்தவொரு கட்சியும் தனியாக பெற முடியாது.

இதற்கிடையே தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ள தயார் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் உமர் அப்துல்லாவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க விரும்புவதாகவே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்