தேசிய இறைச்சி பதப்படுத்தும் வாரியம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (20:09 IST)
தேசிய இறைச்சி மற்றும் கோழி இறைச்சி பதப்படுத்தும் ஒழுங்குமுறை வாரியம்' அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்திருக்கும். இந்த கமிட்டி அமைப்பதற்காக மூன்றாண்டுகளுக்கு ரூ.14.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் இந்த தேசிய இறைச்சி மற்றும் கோழி இறைச்சி பதப்படுத்தும் ஒழுங்குமுறை வாரியத்தை சொசைட்டி பதிவுச் சட்டம் 1860 கீழ் ஒரு சொசைட்டியாக பதிவு செய்து கொள்ளும்.
இது ஒரு தன்னாட்சிப் பெற்ற அமைப்பாகும். துவக்கத்தில் அரசின் மேற்பார்வையில் நடைபெறும். சில காலம் கழித்து தொழில் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும்.
இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் ஆகியோர்களின் மேம்பாட்டுக்காக இந்த வாரியம் செயல்படும். ஆடு, மாடு, கோழி இறைச்சியை பதப்படுத்தும் மையம் அமைப்பதற்கு தேவையான நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை இந்த வாரியம் வழங்கும்.