'கிரீமி லேயர்' வருமான வரம்பு உயர்வு: மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!
திங்கள், 15 டிசம்பர் 2008 (20:35 IST)
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 'கிரீமி லேயர்' பிரிவினருக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
மத்திய அரசிற்கு தாக்கீது அனுப்பியுள்ள தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி. சதாசிவம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 2009 ஜனவரி மூன்றாம் வாரத்திற்குத் தள்ளி வைத்தது.
மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நாயர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கிரீமி லேயர் பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பை உயர்த்தி 2008 அக்டோபர் 13 இல் மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவு, காரணமற்றது, நியாயமற்றது, மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களில் நிரப்பப்படவிருந்த பொதுப் பிரிவு மாணவர்களுக்கு பாதிப்பை தரக்கூடியது" என்று கூறியுள்ளனர்.
மேலும், "மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களில் பொதுப் பிரிவு மாணவர்களை நிரப்பலாம் என்று அக்டோபர் 14 இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அக்டோபர் 13இல் மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவால் உச்ச நீதிமன்ற உத்தரவு அமலுக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது" என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.