பாகிஸ்தானிற்கு ஜான் கெர்ரி எச்சரிக்கை!
திங்கள், 15 டிசம்பர் 2008 (18:00 IST)
லஸ்கர் ஈ தயீபா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வதை நிறுத்தி, அவற்றின் நடவடிக்கைகளை உடனடியாக முறியடிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் கெர்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஜான் கெர்ரி தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாகக் கேட்டறிந்தார். தாக்குதலிற்குப் பிந்தைய நிலைமை குறித்தும், இதில் லஸ்கர் ஈ தயீபா இயக்கத்திற்கு உள்ள பங்கு குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் கெர்ரி, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.தான் லஸ்கர் ஈ தயீபா அமைப்பை ஊக்குவிப்பதுடன், தேவையான உதவிகளையும் செய்கிறது என்றார்.
லஸ்கர் ஈ தயீபா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வதை நிறுத்தி, அவற்றின் நடவடிக்கைகளை உடனடியாக முறியடிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை எச்சரித்த அவர், ஐ.எஸ்.ஐ. நிறுவனத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் ஜான் கெர்ரி.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான ஜான் கெர்ரி அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள பராக் ஒபாமாவுடன் அதிக நெருக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.