பயங்கரவாதத்தை ஒடுக்காமல் நல்லுறவு சாத்தியமில்லை: பிரதமர்
திங்கள், 15 டிசம்பர் 2008 (18:05 IST)
தங்களது மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை அனுமதிக்கும்வரை பாகிஸ்தானுடன் நல்லுறவு என்ற கனவு நிஜமாகாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தெற்கு காஷ்மீரில் ஷாங்கஸ் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.
“தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருக்கவே இந்தியா விரும்புகிறது. ஆனால், தங்களுடைய மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கும் வரை பாகிஸ்தானுடன் நல்லுறவு கொள்வது என்ற கனவு நிசமாகாது. இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்காதீர்கள்” என்று கூறிய மன்மோகன் சிங், பரஸ்பர புரிந்துணர்வின் மூலம் நமக்கிடையே நல்லுறவை வளர்த்துக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.
“ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை உட்பட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நட்பு ரீதியிலான் பேச்சுவார்த்தையின் மூலம் அமைதித் தீர்வு காணவே விரும்புகிறோம். அதற்காக நமது எல்லைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால், தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டுத் தீர்வு காணலாம்” என்று மன்மோகன் சிங் கூறினார்.