2010க்குள் 2 கோடி அகண்ட அலைவரிசை இணைப்பு : ஆ. ராசா!
புதன், 3 டிசம்பர் 2008 (21:56 IST)
2010ஆம் ஆண்டுக்குள் 2 கோடி அகண்ட அலைவரிசை இணைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற இணையதள பயன்பாட்டு அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், "சர்வதேச சந்தையில் இந்திய மென்பொருட்கள் மற்றும் சேவைத் தொழில்கள் தனது பெயரை நிலை நிறுத்தியுள்ளன. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.
மேலும், இணையதள பயன்பாட்டு அமைப்பு ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப அமைப்பு குறித்த உலக மாநாடு ஜெனீவா மற்றும் டுனீஸ் நகரங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியா முக்கிய உறுப்பினராக பங்கேற்றது. உலக அரங்கில் இத்துறையில் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கும் இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்கை குறிக்கோளாக கொண்டு செயல்படவும் இணையதளம் உறுதுணையாக உள்ளது.
நாட்டின் அதிவிரைவான பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை இந்தியா அங்கீகரித்துள்ளது. சமீப காலத்தில் இந்திய தொலைத் தொடர்புத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து உள்ளது.
கம்பியில்லா தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்தியதில் இந்தியா தற்போது சீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது ஏறக்குறைய 30 கோடி செல்பேசி இணைப்புகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் 80 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவை அளித்து வருகிறது. இந்த வளர்ச்சியின் வாயிலாக 2010ஆம் ஆண்டுக்குள் 50 கோடி செல்பேசி இணைப்புகளை ஏற்படுத்தி இலக்கை விஞ்சும் அளவில் நாம் செயல்பட்டு வருகிறோம்.
மேலும், அகண்ட அலைவரிசை பயன்பாட்டை விரிவாக்க நமது அரசு முன்னுரிமை அளித்துள்ளது. கிராமப்புறங்களில் கணினி வழி கல்வி, தொலை வழி மருத்துவம், மின்னணு ஆட்சி முறை ஆகியவற்றை ஏற்படுத்துவது இந்தியாவின் தொலை நோக்காக உள்ளது. 2010ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட 2 கோடி அகண்ட அலைவரிசை இணைப்புகள் ஏற்படுத்தப்படும். அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், பொது சுகாதார மையங்கள் ஆகியவற்றில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
பொது சேவை மையங்களின் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் அரசின் சேவைகளை கிடைக்க செய்ய தேசிய மின்னணு ஆட்சி முறை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள சேவைகள் வழங்கப்படும். தற்போது 20 ஆயிரம் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2009ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அனைத்து சேவை மையங்களும் செயல்படத் துவங்கும்.
கிராமப்புறங்களில் சாலைப் போக்குவரத்து, நில ஆவணங்கள், வர்த்தக வரிகள், வேலை வாய்ப்பு பதிவு மையங்கள், வேளாண்மை, நுகர் பொருள் வழங்குவதல், கருவூலங்கள், நிலப்பதிவுகள், கல்வி மற்றும் கொள்கை, ஆகியவை கணினி வழியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதோடு மட்டுமல்லாமல் காப்பீடு, கலால் வரி, தேசிய அடையாள அட்டை, ஓய்வூதியம், மின்னஞ்சல், வங்கிச் சேவைகள், கடவுச்சீட்டு, விசா மற்றும் வருமான வரி போன்ற சேவைகளும் அளிக்கப்படும்.
இணையதளத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ், இந்தி, தெலுங்கு, அசாம், கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய பத்து மொழிகளில் மென்பொருள்கள் மற்றும் எழுத்து வடிவங்களை உருவாக்க தகவல் தொழில்நுட்பத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது.
வெளிப்படையான ஆட்சி முறையை மக்கள் அறிந்து கொள்ள 2005ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 அமலாக்கப்பட்டது. இணையதளம் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை கட்டுப்படுத்த சட்ட வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தகவல் தொழில்நுட்ப திருத்த மசோதா 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இணையதளம் வாயிலாக நடைபெறும் கணினி சார்ந்த குற்றங்களைத் தடுக்க இந்த சட்டம் வகை செய்கிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்குள்ளும் ஒத்துழைப்பையும் உடன்பாட்டையும் உருவாக்க பாடுபட வேண்டும் என்று ராசா தெரிவித்தார்.