மும்பையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நிகழ்வையடுத்து, பயங்கரவாத செயல்களை தடுப்பது குறித்தும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்தும் ஆலோசனை செய்தவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்தும், பயங்கரவாதத்தை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.
இதையடுத்து, ஒரு அவசர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்து இருக்கிறார். டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
மும்பையில் பயங்கரவாதிகள் நேரடியாக நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாற்றியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாகவும் இந்த அவசர அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.