கோத்ரா கலவரங்கள் திட்டமிடப்பட்ட சதி: நானாவதி ஆணையம்!
வியாழன், 25 செப்டம்பர் 2008 (17:21 IST)
கோத்ராவில் கடந்த 2002 ஆம் ஆண்டு கரசேவகர்கள் பயணம் செய்த சபர்மதி விரைவு ரயிலிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவமும், அதையடுத்து நடந்த கலவரங்களும் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று நானாவதி ஆணையம் கூறியுள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த கலவரங்கள் குறித்து விசாரித்து வரும் நானாவதி ஆணைய அறிக்கையின் முதல் பகுதி இன்று குஜராத் மாநில சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், "பிப்ரவரி 27, 2002 அன்று நடந்த சபர்மதி விரைவு ரயிலின் எஸ்-6 பெட்டி எரிப்புச் சம்பவம் தற்செயலானது அல்ல. அது திட்டமிடப்பட்ட சதிச் செயல்தான். அயோத்தியில் இருந்து சபர்மதி ரயிலில் கரசேவகர்கள் திரும்புகின்றனர் என்பதை அறிந்து, கோத்ராவில் உள்ள ஆமன் விருந்தினர் மாளிகையில் இந்தச் சதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கோ அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நானாவதி ஆணையம் கூறியுள்ளது.
சட்டப் பேரவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
லாலு பிரசாத் தலைமையிலான ரயில்வே அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி யு.சி.பானர்ஜி தலைமையிலான ஆணையம், சபர்மதி விரைவு ரயிலில் தீ பிடித்தது விபத்து என்று கூறியுள்ள நிலையில், நானாவதி ஆணையம் அதைச் சதி என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002 ஆம் ஆண்டு சபர்மதி விரைவு ரயில் பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதில் 58 கரசேவகர்கள் பலியாயினர். இதையடுத்து வெடித்த மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி நானாவதி நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் நீதிபதி கே.ஜி. ஷா இறந்ததையடுத்து நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையத்தில் நீதிபதி அக்ஷய் மேத்தா நியமிக்கப்பட்டார்.
இந்த ஆணையம் கடந்த 6 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் முதல் பகுதியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நீதிபதி நானாவதி சமர்ப்பித்தார்.
இதையடுத்து அது இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.