சிங்கூர் விவகாரம்: மம்தா ஒரு வாரம் கெடு!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (13:54 IST)
சிங்கூர் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தங்களது கோரிக்கையை மேற்கு வங்க அரசு 7 நாட்களில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனம் நானோ கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதற்குத் தேவையான ஆயிரம் ஏக்கர் நிலத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசு கையகப்படுத்தி வழங்கியது.

இதில் விவசாயிகளிடம் இருந்து 400 ஏக்கர் விளை நிலத்தை மேற்கு வங்க அரசு பலவந்தமாக கையகப்படுத்தியதாகவும், அதை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி, கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக நீடித்து வந்த பிரச்சனை, மேற்கு வங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தியின் முயற்சியால் கடந்த 7 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அவரது முன்னிலையில் நடந்த இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டனர்.

நஷ்டஈடு கொடுக்காத விவசாயிகளுக்கு, கையகப்படுத்திய நிலத்திற்கு பதிலாக நானோ கார் தொழிற்சாலை வளாகத்திற்குள்ளேயே நிலம் அளிக்க, அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 15 நாட்களாக நடந்த தர்ணா போராட்டத்தை உடனடியாக ‌வில‌க்‌கி‌க் கொள்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தை இன்னும் 7 தினங்களுக்குள் மேற்கு வங்க அரசு நிறைவேற்றத் தவறினால் மீண்டும் தனது கட்சி போராட்டத்தில் இறங்கும் என்று மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

மேலும், அரசியல் சாசனத்தின் 355 வது பிரிவை மேற்கு வங்கத்தில் அமல் செய்ய வலியுறுத்தி வரும் 25, 26 ஆம் தேதிகளில் சிங்கூரில் பேரணியை நடத்தவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்