பிரதமர் நாளை அமெரிக்கா, பிரான்ஸ் பயணம்: அணு சக்தி ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம்!
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (16:29 IST)
அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 10 நாள் பயணமாக நாளை புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அணு சக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள் ஆகியவை தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களுடனும் விவாதிக்கவுள்ளார்.
தனது பயணத்தில் முதலில் அமெரிக்காவிற்கு செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், 25 ஆம் தேதி அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐச் சந்தித்து இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கவுள்ளார். மேலும், இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள், வர்த்தக உறவுகள் பற்றியும் பேச்சு நடக்கிறது.
இதையடுத்து 26 ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர், பயங்கரவாதம் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்தார்.
ஐ.நா. பொது அவையின் இடையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியைச் சந்திக்குப் பிரதமர், பயங்கரவாதத்தை முறியடிப்பது குறித்தும், இந்தியா- பாகிஸ்தான் அமைதிப் பேச்சை ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுத்துச் செல்வது குறித்தும் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் பிரான்ஸ் செல்லும் பிரதமர், 29 ஆம் தேதி மார்சிலி நகரில் நடக்கும் இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டிலும், 30 ஆம் தேதி பாரீசில் நடக்கவுள்ள இந்தியா- பிரான்ஸ் இருதரப்பு மாநாட்டிலும் பங்கேற்றுப் பேசுகிறார்.
அப்போது பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசியைச் சந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அணு சக்தி ஒத்துழைப்பு சார்ந்த இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கிறார்.