அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் மட்டும் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் டன் கழிவுப் பொருட்களை இந்தியாவிற்குள் கொட்டியுள்ளன என்று மாநிலங்களவை விதி ஆக்கக் குழுத் தலைவர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய கடலோர பகுதிகளில் குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளில் மின்னணு கழிவுப் பொருட்கள் அதிகளவில் கொட்டப்படுவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 50 ஆயிரம் டன் மின்னணு கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் மட்டும் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் டன் கழிவுப் பொருட்களை இந்தியாவிற்குள் கொட்டியுள்ளன" என்றார்.
இந்தியாவை மேலை நாடுகள் குப்பை காடாக மாற்றுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வகையில் மறுசுழற்சி என்ற பெயரில் அபாயகரமான கழிவுகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும். மேலும் இதுபோன்ற கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போது டெல்லி, புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பயணம் மேற்கொண்டுள்ளோம். இந்தியாவில் உள்ள எல்லாக் கடலோர மாவட்டங்களிலும் ஆய்வினை முடித்த பின்பு எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆய்வறிக்கையை சமர்ப்போம் என்றார் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா.
கழிவுகள் மூலம் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்கவும் தேவையான சட்டத் திருத்தங்களை பரிந்துரை செய்யவும் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களவை விதி ஆக்கக் குழு சென்னை வந்துள்ளது.
நேற்று (17.09.2008) முதல் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், துறைமுக நிர்வாகம், மருத்துவமனை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கழிவு மேலாண்மை குறித்து இக்குழு ஆலோசனை நடத்தியது.