அக்.17-ல் நாடாளுமன்றம் கூடுகிறது!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (12:09 IST)
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அடுத்த மாதம் 17-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது.

நவம்பர் மாதம் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில், அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் நெருக்கடியைத் தரக்கூடும் என்று தெரிகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, அரசு மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை இத்தொடரின்போது கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலைவாசி உயர்வு, டாடா தொழிற்சாலை விவகாரம், அமர்நாத் நில ஒதுக்கீடு விவகாரம், மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் எதிர்க்கட்சிகள் கிளப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை திரும்பப் பெற்றபின் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடர் இதுவாகும். அநேகமாக 14-வது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டமாகவும் இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்