ஒரிசா கலவரம்: ம.பு.க. விசாரணைக்கு உத்தரவு?
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (15:15 IST)
ஒரிசா மதக் கலவரங்களில் பலர் பலியாகியுள்ளது குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து மத்தியப் புலனாய்வுக் கழக விசாரணைக்கு (ம.பு.க.) உத்தரவிட விருப்பம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபல், "ஒரிசா கலவரங்களில் நீதி விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தாமதம் ஏற்படும் என்பதால், இந்த விவகாரத்தை மத்தியப் புலனாய்வுக் கழகத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு விரும்புகிறது" என்றார்.
இருந்தாலும், மத்தியப் புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு பரிந்துரைக்க வேண்டியது மாநில அரசுதான் என்பதால், இதில் மத்திய அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரிசா கலவரங்கள் மத்திய அரசிற்கு ஆழ்ந்த கவலையைத் தந்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் கபில்சிபல், "ஒரிசாவில் இயல்பு நிலை திரும்ப என்ன உதவி தேவைப்பட்டாலும் அதைச் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர், ஆளுநர் ஆகியோரிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
"குறிப்பிட்ட அமைப்பின் கீழ் உள்ள சில தனி நபர்களின் அறிவுகெட்ட செயல்களைச் சகித்துக்கொள்ள முடியாது" என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் கண்டனம் தெரிவித்தார்.
மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள மத்திய அரசு, அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்ற அவர், குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கி இயல்பு நிலையைக் கொண்டு வரவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.