ஒரிசாவில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (12:11 IST)
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து ஒரிசாவில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 12 மணி நேர வேலைநிறுத்தம் காரணமாக, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலம் புல்பானி அருகே உள்ள ஜலேஷ்பதா ஆஸ்ரமத்திற்குள் சனிக்கிழமை இரவு நுழைந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொண்டனர்.

வி.ஹெச்.பி. அமைப்பின் மூத்த தலைவர்கள் அரூபானந்தா, சின்மயானந்தா, மாதாபக்தி மயி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆகியோர் இறந்தவர்களில் அடங்குவர்.

இப்படுகொலையைக் கண்டித்து வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள், மாநிலம் தழுவிய 12 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளன.

பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் கந்தமாலில் ஒருசில வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர மற்ற இடங்களில் வேலைநிறுத்தம் அமைதியாகவே நடந்து வருகிறது.

தலைநகர் புவனேஸ்வரில் வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் தொண்டர்கள் சாலைகளின் குறுக்கே அமர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போக்குவரத்திற்கு அவர்கள் தடையை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இருப்புப் பாதைகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டக்கார்கள் மறியல் செய்ததால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

பேருந்துகள், டாக்சி, கார், இரு சக்கர வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.

பதற்றம் நிறைந்த பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்