அகமதாபாத் குண்டு வெடிப்பு: சிமி இயக்கத் தலைவரிடம் விசாரிக்க முடிவு!
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (18:03 IST)
அகமதாபாத்தில் கடந்த ஜூலை 26- இல் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) தலைவர் சஃப்தார் நகோரியிடம் விசாரணை நடத்த குஜராத் காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
நகோரி தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"நகோரியும் அவரது சகோதரர் கரீமுதீனும் நமது நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டுகளை வைக்கச் சதி செய்தது தெரியவந்துள்ளது. இதற்காக குஜராத்திலும், கேரளத்திலும் சில இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர். அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் அவர்களுக்குத் தொடர்புள்ளது" என்று அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் ஆசிஷ் பாட்டியா தெரிவித்தார்.
ஜூலை 26 ஆம் தேதி அகமதாபாத்தில் குண்டு வெடிப்புகள் நடப்பதற்கு முன்பு, மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டம், கர்நாடகத்தில் தார்வாத் மாவட்டம் உள்படப் பல்வேறு இடங்களில் சிமி இயக்கம் பயிற்சி முகாம்களை நடத்தியதாகவும், அதில் பங்கேற்றவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், மலை ஏறுதல், வரைபடத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அகமதாபாத் குற்றப்பிரிவு காவலர்கள் தெரிவித்தனர்.
நகோரியும் அவரது கூட்டாளிகளும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். அகமதாபாத் குண்டு வெடிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த அவர்களை குஜராத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டு இருப்பதாகவும், ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளிலும் அவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கருதுவதாகவும் பாட்டியா தெரிவித்தார்.
கடந்த 2001- இல் சிமி இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு அந்த இயக்கம், மிதவாதம் மற்றும் தீவிரவாதம் என இரண்டாகப் பிரிந்தது. இதில் தீவிரவாத குணம் கொண்ட நகோரி, மிஜூஃபுல் இஸ்லாம் என்பவர் தலைமையில் இயங்கி வந்த மிதவாதக் குழுவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தார். இதன் விளைவாக சிமி இயக்கத்தின் நாச வேலைகள் துவங்கியுள்ளன என்றார் பாட்டியா.