ஜம்முவில் கலவரம் நீடிப்பு: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (12:05 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா என்ற இடத்தில் இன்று காலை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கலவரக்காரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

அமர்நாத் நில பிரச்சினை தொடர்பாக வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியாத் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஷேக் அஜீஸ் மற்றும் 3 கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நேற்று முதல் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமர்நாத் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கிய உத்தரவை ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் வெடித்தது.

இப்பிரச்சினையில் காஷ்மீர் மாநிலத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக ஹூரியாத் மாநாட்டுக் கட்சியினர் முயற்சித்த போது, அவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பந்திப்போரா பகுதியில் கலவரக்காரர்கள் இன்றும் போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே வன்முறை நீடிப்பதைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு ஜம்முவில் நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்