பிந்த்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு: பஞ்சாப் அரசு அறிவிப்பு!
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (17:30 IST)
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அபினவ் பிந்த்ரா பெருமை சேர்த்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அரியானா மாநில முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, பிந்த்ராவுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும், பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்ற பிந்த்ராவுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இது தொடர்பாக இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதேபோல் இந்தியா கிரிக்கெட் வாரியமும் பிந்த்ராவுக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
''ஒலிம்பிக்கல் தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார் பிந்த்ரா என்றும் இதன் மூலம் இந்திய விளையாட்டு மேலும் சாதனை படைக்க வழிவகுக்கும்'' என்று கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 'தங்க மகன்' அபினவ் பிந்த்ராவுக்கு பாராட்டுக்களும், பரிசுத் தொகையும் குவிந்த வண்ணம் உள்ளது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, மக்களவைத் தலைவர் சோம்நாத் சேட்டர்ஜி உள்பட பலர் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் 'ஏர்ரைபிள்' இறுதிச் சுற்றில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா மொத்தம் 700.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தியா இதற்கு முன்னர் கடந்த 1980ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் தங்கம் வென்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.