கங்கை ஆறு வழக்கு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (21:26 IST)
கங்கை ஆற்றில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகளையும், வேதிப் பொருட்களையும் கலப்பதன் மூலம், அதன் நீரை மனிதர்கள் பயன்படுத்தத் தகாதவாறு மாற்றுவதை, மாசுக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளைப் பின்பற்றித் தடுக்க வேண்டும் என்று அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று தாக்கீது அனுப்பியுள்ளது.
கங்கை ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கலக்க அனுமதிப்பதற்கு முன்பு, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்ட விதியை, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமோ, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களோ கடைபிடிக்கவில்லை என்று கிருஷ்ண மஹாஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பீகார், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வழியாகச் செல்லும், புனித கங்கை ஆற்றில் கலக்கப்படும் எல்லா விதமான வேதிப் பொருட்கள் மற்றும் கழிவுகளைக் கட்டுப்படுத்தி, மாசைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ.1000 கோடி மதிப்பிலான கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்தும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.