மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து: டி.ஆர்.பாலு!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (14:08 IST)
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவரின் ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து, விபத்தை ஏற்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

மாநில போக்குவரத்து அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெ‌ல்லியி‌ல் நடந்தது. கூட்டத்தை டி.ஆர். பாலு துவக்கி வைத்து பேசியதாவது:

"மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். போதையில் வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டால் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்கள் வரை ரத்து செய்ய வேண்டும். அதிக வேகமாகவோ, கவனக் குறைவாகவோ வாகனம் ஓட்டி அதன் மூலம் மற்றவர்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்பது உள்பட பல அம்சங்களை உள்ளடக்கி மோட்டார் வாகனச் சட்டம் 1988-ல் திருத்தம் கொண்டு வருமாறு கூறப்பட்டது.

இது தொடர்பாக, மத்திய அரசு அளித்த உத்தேச சட்டத்திருத்தங்களை மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. உரிய திருத்தங்கள் செய்யப்பட்ட இந்த மசோதா வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் அமலான பிறகு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். இதன் மூலம் மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும். விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடுகள் விரைவில் கிடைக்கும் வழிமுறைகள் எளிதாகும்" எ‌ன்று கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்