மே.வங்க தலைமைச் செயலகத்தில் தீவிபத்து

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (11:50 IST)
மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள ரைட்டர்ஸ் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் அகதிகள் மறுவாழ்வுத் துறை, தீயணைப்பு மற்றும் நகராட்சி விவகாரத்துறை அலுவலகங்கள் சேதம் அடைந்தன.

ஈ-பிளாக்கில் மூன்றாவது மாடியில் நூறாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில் நேற்று காலை தீப்பற்றியதாகவும், 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்றாலும் இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த காகிதங்கள், ஆவணங்கள், மேஜை-நாற்காலிகள் தீயில் எரிந்து சேதமானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. பாதிப்புக்குள்ளான கட்டிடத்தைச் சுற்றி யாரும் செல்லாமல் இருக்க காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் தான் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் அலுவலகம் உள்பட முக்கிய துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில், அந்த கட்டிடம் அமைந்துள்ள சாலையில் வாகனப் போக்குவரத்து இன்று மீண்டும் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்