அமர்நாத் நில விவகாரம்: ஜம்மு கலவரத்தில் 3 பேர் பலி!
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:53 IST)
அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தில், ஜம்முவின் பல்வேறு இடங்களில் இன்று வெடித்த கலவரங்களில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் 20 பேர் உட்பட 29 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலின் வாரியத்திற்கு வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஒதுக்கிய விவகாரத்தில் படலவேறு அமைப்பினர் நடத்தி வரும் போராட்டங்களினால், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகப் பதற்றம் நிலவி வருகிறது.
ஜம்மு, சம்பா ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்காகப் ஏராளமான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று சம்பா நகரப் பேருந்து நிலையத்தில் குவிந்த போராட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடை செய்ய முயன்றதுடன், வாகனங்களின் மீது கற்களை வீசியுள்ளனர்.
அவர்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் நடத்திய தடியடியிலும், கண்ணீர்ப் புகை குண்டு வீச்சிலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இருந்தாலும், கலவரம் கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் 2 பேர் பலியானதாகவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் கலவரத்தில் சிக்கி ஒருவர் பலியானார். பாதுகாப்புப் படையினர் 20 பேர் உட்பட 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.