ஜம்மு ஆளுநரை நீக்க வேண்டும்: பூரி சங்கராச்சாரியார்!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (18:33 IST)
காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை‌க் கோயிலு‌க்கு நிலம் வழங்கிய உத்தரவை ரத்து செய்த காரணத்திற்காக அம்மாநில ஆளுநர் எ‌ன்.எ‌ன். வோரா-வை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என பூரி சங்கராச்சாரியார் வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பூரி சங்கராச்சாரியா சுவாமி அதோக்ஸ் ஜனந்தா தேவ்தீர்த், அரசியலமைப்பை நிலைநிறுத்த முடியாத, அமைதி‌க்கு‌க் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளை தடுக்க முடியாத ஜம்மு-காஷ்மீர் ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கெளகாத்தியில் கூ‌றினார்.

ஆளுநர் வோரா கா‌‌‌ஷ்‌மீ‌ர் மக்களை‌த் தூண்டுவதுட‌ன், இத‌ன்மூல‌ம் ராணுவ‌த்‌தின‌ர் சட்டத்தை கையிலெடுத்துக் கொள்வதற்கும் வோரா உதவியு‌ள்ளா‌ர் எ‌ன்று பூரி சங்கராச்சாரியார் குற்றம்சா‌ற்‌றியுள்ளா‌ர்.

ஏதோ ஒரு திட்டத்துடன் வோரா செயல்பட்டு வருவதாகவும், தமக்கு தெரிந்த தகவல்படி, அடுத்த ஒரிரு நாட்களில் 15 மூத்த பத்திரிகையாளர்களை கைது செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவ‌ர் கூ‌றினார்.

ஜம்மு ஆளுநர் பதவிக்கு வோரா நியமிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அமர்நாத் கோயில் நில விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு காஷ்மீர் மக்களும் மாநில அரசும் பேச்சு நட‌த்‌தினா‌ல் ம‌ட்டுமே தீர்வு காண முடியும் எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்