பயங்கரவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பா.ஜ.க. கோரிக்கை!
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (16:16 IST)
பயங்கரவாதிகள், நக்சலைட்டுகளின் மீது மத்தியில் ஆளும் ஐ.மு.கூ. அரசு மென்மையான போக்கைக் கடைபிடித்து வருவதாகக் குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
"பயங்கரவாதிகளின் மீது காங்கிரஸ் அரசு மென்மையான போக்கைக் கடைபிடித்து வருகிறது. நம்பிக்கை வாக்கிற்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்குப் பிறகு இந்தப் போக்கு அதிகரித்துள்ளது." என்று பா.ஜ.க. பொதுச் செயலர் வினய் கடியார் குற்றம்சாற்றியுள்ளார்.
"ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்த பிறகு, பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் அகியோர் ஊக்குவிக்கப்படுகின்றனர்" என்ற அவர், இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றார்.
பீகாரில் வாக்குகளைப் பெறுவதற்காக சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் சுவரொட்டிகள் கூட ஒட்டப்படுகின்றன என்று குற்றம்சாற்றிய வினய், "நாங்கள் ராவணனின் உருவ பொம்மையை எரித்தோம். வாக்குக்களை பெறுவதற்காக அவரைப் போற்றவில்லை" என்று விளக்கமளித்தார்.
பயங்கரவாதம், நக்சலிசம் ஆகியவற்றை ஒடுக்குவதற்காக கடுமையான நடவடிக்கைகள் எதையும் இதுவரை எடுக்கவில்லை என்று குற்றம்சாற்றிய வினய், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை கடுமையாக விமர்சித்தார்.