ஹர்கிஷன் சிங் சுர்ஜித் உடல் தகனம்

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (12:58 IST)
நொய்டாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் உடல், அரசு மரியாதையுடன் புதுடெல்லியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி உட்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று சுர்ஜித்தின் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலியும், இரங்கலும் தெரிவித்தனர்.

நேற்று மாலை சுர்ஜித்தின் உடல் அவரது வீட்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு, அலங்கார வண்டியில் ஊர்வலமாக நிகாம்பாத் காட் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உடல் மயானத்தை அடைந்ததும் இறுதி சடங்குகள் தொடங்கின. முன்னதாக டெல்லி போலீசார் 3 முறை துப்பாக்கி குண்டுகளை முழங்கியும், சோக கீதம் இசைத்தும் மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, உடலுக்கு சுர்ஜித்தின் மகன் பரம்ஜித் சிங் தீ மூட்டினார்.

இறுதி நிகழ்ச்சியில் சுர்ஜித்தின் மனைவி பிரிதம் கவுர், குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பரதன், தேசியச் செயலர் டி.ராஜா, மத்திய அமைச்சர்கள் சைபுதீன் சோஸ், ஜெய்பால் ரெட்டி, முன்னாள் பிரதமர்கள் குஜ்ரால், தேவேகவுடா, சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் முலாயம் சிங், அமர்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்