மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்த்தே தீருவது என்று இடதுசாரிக் கட்சிகள் தீவிரமாக உள்ளன. அதன் ஒருகட்டமாக ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்எல்டி) கட்சியின் தலைவர் அஜீத் சிங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் இன்று சந்தித்துப் பேசினார்.
அஜீத் சிங் கட்சிக்கு மக்களவையில் 3 உறுப்பினர்கள் உள்ளனர். புதுடெல்லியில் உள்ள அஜீத் சிங்கின் வீட்டிற்கு சென்ற பரதன், இடதுசாரிக்கட்சிகளின் அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு ஆர்எல்டி-யின் ஆதரவைக் கோரினார்.
அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன் என்று பரதன் விளக்கிக் கூறியதாகவும், வரும் 22-ம் தேதியன்று நடைபெறவுள்ள அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக ஆர்எல்டி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
அஜீத் சிங் கட்சியின் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சித் தரப்பில் ஏற்கனவே அவரை சந்தித்துள்ள நிலையில், பரதனின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தமது கட்சியின் முடிவு குறித்து இன்னமும் அறிவிக்காத அஜீத் சிங், அதற்கு இன்னமும் கால அவகாசம் இருப்பதாகக் கூறினார்.
59 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மக்களவை வரும் 22ம் தேதி கூடுகிறது. இடதுசாரிக் கட்சிகள் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பகுஜன் சமாஜ், தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளின் தலைவர்களை அணுகி ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களுடன் தாம் தொடர்ந்து பேசிவருவதாகத் தெரிவித்துள்ளார்.