குடியரசுத் தலைவரைச் சந்திக்கிறார் பிரதமர்
வியாழன், 10 ஜூலை 2008 (12:44 IST)
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் விலக்கிக் கொண்ட நிலையில், அரசுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவு குறித்து விவாதிக்க வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி பிரதமர் இன்று இரவு 7 மணியளவில் பிரதீபா பாட்டீலைச் சந்தித்துப் பேசுவார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், நேற்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆதரவை விலக்கிக் கொண்டதற்கான கடிதங்களை அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரைக் கேட்டுக்கொண்டனர்.
தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கருதுவதாகத் தெரிகிறது.
மேலும், இந்திய அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அடுத்து, ஜி8 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், நேற்று நள்ளிரவில் இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.