அணு சக்தி: ஜார்ஜ் புஷ்சை சந்திக்கிறார் மன்மோகன் சிங்!
வெள்ளி, 4 ஜூலை 2008 (15:59 IST)
பிரதமர் மன்மோகன் சிங் ஜூலை 9 ஆம் தேதி ஜப்பானில் நடக்கவுள்ள ஜி- 8 மாநாட்டின் இடையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சைச் சந்திக்க உள்ளார். அப்போது அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான உள்நாட்டு பிரச்சனைகள் குறித்தும், அதைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் மூன்று நாள் பயணம் குறித்துச் செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், "முடிந்தவரை விரைவாக அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு விரும்புகிறது. ஆனால் காலக்கெடு நிர்ணயித்தால் அது சாத்தியமில்லை என்று கூறியதுடன், மன்மோகன்- புஷ் சந்திப்பின் போது என்னென்ன விவரங்கள் விவாதிக்கப்பட உள்ளன என்பது குறித்து எதையும் கூறவில்லை.
பன்னாட்டு அணு சக்தி முகமையை அரசு எப்போது நாடும் என்று கேட்டதற்கு, "முடிந்தவரை விரைவாக நாடுவோம். அதுபற்றி முடிவெடுத்தவுடன் தெரியப்படுத்துவோம்" சிவசங்கர் மேனன், 2005 ஜூலையில் மேற்கொள்ளட்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி அணு உபகரணங்கள் வழங்கு நாடுகள் குழு (என்.எஸ்.ஜி.)விடம் இந்தியாவிற்கு தடை விலக்குப் பெற்றுத் தருவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
என்.எஸ்.ஜி. உறுப்பினர்களுடன் இந்தியா எப்போதும் தொடர்பில் உள்ளது என்று கூறிய அவர், ஜி-8 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களில் பலர் என்.எஸ்.ஜி.யின் உறுப்பினர்கள்தான் என்றார்.