பேச்சில் சுமூக தீர்வு: லாரி வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!
வெள்ளி, 4 ஜூலை 2008 (10:15 IST)
மத்திய அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
சேவை வரி, சுங்க வரி ரத்து, தட்டுப்பாடின்றி டீசல் விநியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகத்தில் லாரி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் சரக்குகளைக் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது.
இதையடுத்து லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சு நடத்தியது. நேற்றிரவு 10 மணி நேரம் நீடித்த இந்த பேச்சின் முடிவில் அரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் விலகிக்கொள்ளப்படுவதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சரண்சிங் லோஹாரா தெரிவித்துள்ளார்.
சேவை வரி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் இதர அதிகாரிகள் மற்றும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் 6 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு சுங்க வரி சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த குழு 9 மாதங்களுக்குள் தங்களது அறிக்கையை அரசிடம் சமர்பிக்கும்.
அடுத்த ஓராண்டிற்கு நெடுஞ்சாலைகளில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட அதே அளவு சுங்க வரி வசூலிக்கப்படும் என்றும் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படும் வரை அரசு சுங்க வரியை உயர்த்தாது என்றும், மத்திய போக்குவரத்து துறை செயலர் பிரம்மதத் கூறியுள்ளார்.
லாரி உரிமையாளர்களுடன் நடந்த பேச்சில் கலந்து கொண்ட மத்திய நிதி மற்றும் வருவாய்த்துறை செயலர் பி.வி.விடே, சேவை வரியை பொறுத்தவரையில் கடந்த 2004ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடரும் என்றார்.
புதிய ஒப்பந்தத்தின்படி லாரி உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சேவை வரி தொடர்பான அனைத்து தாக்கீதுகளும் திரும்பப் பெறப்படும் என்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் லோஹாரா தெரிவித்துள்ளார்.