விரைவில் எரிவாயு குழாய் ஒப்பந்தம்: இந்தியா!

திங்கள், 23 ஜூன் 2008 (15:49 IST)
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்களின் கூட்டம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, ஈரான் எரிசக்தி அமைச்சர் குலாம் ஹூசைன் நோஜிரியை சந்தித்து 7.5 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் பற்றி ஆலோசனை நடத்தினார்.

இதற்கு பின் முரளி தியோரா கூறுகையில், இந்த திட்டத்தில் சிறு பிரச்சனை உள்ளது. இது விரைவில் தீர்க்கப்படும். பாகிஸ்தானுடன் சில பிரச்சனைகள் உள்ளன. இதுவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

பாகிஸ்தானின் பெட்ரோலிய அமைச்சர் மாறியுள்ளார். நாங்கள் புதிய அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். நாங்கள் ஈரானின், பாகிஸ்தானுடன் கூடிய விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று தியோரா தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டில் மூன்று நாடுகளுக்கு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் அமைப்பது பற்றிய ஆலோசனை துவங்கியது. இதன் விலை, எரிவாயு கொண்டுவருவதற்கான கட்டணம் போன்ற விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திட்டம் தொடங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்