ஆதரவை மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது!

செவ்வாய், 17 ஜூன் 2008 (16:14 IST)
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இடதுசாரிக் கட்சிகளுக்கு வந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமை‌யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்‌தி‌ல் கையெழுத்திட முடியாது என்றும், காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத பொருளாதாரக் கொள்களைக் கடைபிடித்து வருகிறது என்றும் அவர் குற்றம்சா‌ற்‌றியுள்ளார்.

ஹைதராபாதில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, நாட்டின் பொருளாதாரத்தை சரிவர நிர்வாகம் செய்யாததற்காக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மோன்டேக் சிங் அலுவாலியா ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்றார்.

இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து அவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அங்கு தேர்தல் வருவதால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் என்றும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு போதும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என்றும் கூறினார்.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொதுச் செயலராகவும் இருந்துவரும் தாஸ்குப்தா, ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நாட்டின் அனைத்து முக்கிய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்